நடிகர் ஆர்யா நடிப்பில் தயாராகியுள்ள ‘டெடி’ திரைப்படம் ஓடிடி தளமான டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் நடிகர் ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘டெடி’. இயக்குனர் சக்தி சௌந்தரராஜன் இயக்கியுள்ள இந்த திரைப்படத்தில் ஆர்யாவின் மனைவியும்,நடிகையுமான சாயிஷா கதாநாயகியாக நடித்துள்ளார் . இந்த படத்திற்கு டி . இமான் இசையமைத்துள்ளார். மேலும் இந்த படத்தில் சதீஷ் ,சாக்ஷி அகர்வால், இயக்குனர் மகிழ்திருமேனி, கருணாகரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்தை தியேட்டரில் வெளியிட முடிவு செய்திருந்தனர்.
ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக ஏழு மாதங்களுக்கு மேலாக மூடப்பட்ட திரையரங்குகள் சமீபத்தில்தான் திறக்கப்பட்டது. இருப்பினும் தியேட்டருக்கு பார்வையாளர்கள் அதிகம் வராத காரணத்தால் பல திரைப்படங்கள் ஓடிடியில் ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர்கள் முடிவு செய்திருந்தனர். ஏற்கனவே விஜய் சேதுபதியின் ‘க.பெ.ரணசிங்கம்’ ,சூர்யாவின் ‘சூரரைப்போற்று’, அந்தகாரம், மூக்குத்தி அம்மன் போன்ற பல திரைப்படங்கள் ஓடிடி தளங்களில் வெளியாகின. அந்தவகையில் தற்போது ஆர்யாவின் ‘டெடி’ திரைப்படமும் ஓடிடி தளமான டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.