ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள இரண்டு திரைப்படங்கள் ஒரே நாளில் தியேட்டர்களில் ரிலீஸாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் ஆர்யா நடிப்பில் உருவான சார்பட்டா பரம்பரை திரைப்படம் ஓடிடியில் ரிலீஸாகி நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்ததாக இவர் ஆனந்த் சங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள எனிமி படத்தில் வில்லனாக நடித்துள்ளார். விஷால் ஹீரோவாக நடித்துள்ள இந்த படத்தில் பிரகாஷ்ராஜ், மிருணாளினி ரவி, மம்தா மோகன்தாஸ், கருணாகரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
மேலும் இந்த படம் வருகிற அக்டோபர் 14-ஆம் தேதி ஆயுதபூஜை பண்டிகையையொட்டி தியேட்டர்களில் ரிலீஸாகும் என படக்குழு அறிவித்திருந்தது. இந்நிலையில் அதே நாளில் சுந்தர்.சி இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ள அரண்மனை- 3 படமும் தியேட்டர்களில் ரிலீஸாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இதுகுறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.