ஜெர்மனி இலங்கை தமிழ் பெண் ஒருவர் நடிகர் ஆர்யா தன்னை திருமணம் செய்வதாக கூறி ரூபாய் 70 லட்சம் பணத்தை பெற்றுக் கொண்டு ஏமாற்றியதாக கூறி அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தன்னுடைய பணத்தை மீட்டுத்தர வேண்டும் என்றும் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இது தொடர்பாக நடிகர் ஆர்யாவிடமும் நேரடியாக விசாரணை மேற்கொண்டனர்.
இதையடுத்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியதில் சென்னையை சேர்ந்த முகமது என்பவர் நடிகை ஆர்யாவை போன்று சமூக வலைதளத்தில் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு ஜெர்மனி வாழ் இலங்கை தமிழ் பெண்ணிடம் பேசி, 70லட்சம் ரூபாய் பணத்தை பறித்துள்ளது தெரியவந்துள்ளது . மேலும்இவருக்கு உடந்தையாக அவருடைய மைத்துனர் முகமது பையாக் என்பவர் இருந்ததும் தெரியவந்துள்ளது. இதையடுத்து அவர்கள் இருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில் ஆர்யா பெயரை களங்கப்படுத்தியதால் அவர் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளார் என்றும், ஆர்யா குறித்து சமூக ஊடகங்களில் அவதூறு பரப்பியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் ஆர்யா வழக்கறிஞர் ஜெரோம் ஜோசப் தெரிவித்துள்ளார்.