நவம்பர் 6தேதி ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி அளிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அக்டோபர் 2ஆம் தேதி தமிழகத்தில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் ஊர்வலம் நடத்த அனுமதி கோரி ஆர்.எஸ்.எஸ் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் நிபந்தனைகளுடன் அனுமதி வழங்க காவல்துறைக்கு உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு தமிழக அரசு அனுமதி மறுத்ததை அடுத்து ஆர்எஸ்எஸ் அமைப்பு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த வழக்கு இன்றைய தினம் நீதிபதி இளந்திரையன் முன்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, ஆர்எஸ்எஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கி நிபந்தனைகள் வகுத்து உத்தரவிட்ட பிறகும் காவல்துறை அனுமதி மறுத்துள்ளதாகவும், இது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல் எனவும், நீதிதுறையை யாரும் குறைத்து மதிப்பிடக்கூடாது எனவும் வாதிட்டார்.
மேலும் ‘பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா’ தடை செய்யப்பட்டதால் நடைபெறும் போராட்டங்களை காரணம் காட்டி நீதிமன்றம் வழங்கிய அனுமதியை காவல்துறையினர் மறுத்து உத்தரவிட முடியாது எனவும் வாதிட்டார். கடந்த 2017 ஆம் ஆண்டு அம்பேத்கர் பிறந்த நாள் அன்று பேரணி நடத்த விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் காவல்துறையில் 3 நாட்களுக்கு முன்னர் மனு கொடுத்து விட்டு உடனடியாக நீதிமன்றத்தை நாடிய போது நிபந்தனைகளுடன் விடுதலை சிறுத்தைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
ஆனால் தற்போது ஆர்எஸ்எஸ் அமைப்பு சார்பில் ஒரு மாதத்திற்கு முன்னதாகவே விண்ணப்பம் அளிக்கப்பட்டும் அந்த கோரிக்கையானது நிராகரிக்கப்பட்டதாக தெரிவித்தார். யாருக்கு எதிராகவும் கோஷம் எழுப்ப மாட்டோம் என உத்தரவாதம் அளித்த பிறகும் காவல் துறை அனுமதி அளிக்க மறுப்பது புரியவில்லை. இது மனவலியை ஏற்படுத்துகிறது என்றும் ஆர்எஸ்எஸ் சார்பில் வாதிடப்பட்டது. ஊர்வலத்திற்கு அனுமதி மறுக்க வேண்டும் என்பதற்காகவே சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என காவல்துறை கூறுவதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
மற்றொரு வழக்கறிஞர் வாதிடுகையில் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பது காவல்துறை கடமை எனவும், பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பு தடையை எதிர்த்து கடுமையான போராட்டம் நடைபெறும் கேரளாவிலும், புதுச்சேரியிலும் ஆர் எஸ் எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில், தமிழகத்தில் மட்டும் அனுமதி மறுக்கப்படுவதாக தெரிவித்தார்.
இதன் பின்னர் காவல்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தேசிய புலனாய்வு முகமையின் சோதனைபாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா உள்ளிட்ட அமைப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டதன் காரணமாக ஆர்எஸ்எஸ் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் வீடுகளில் பெட்ரோல் குண்டு வீச்சு ஆகியவற்றை கருத்தில் கொண்டு தான் ஆர் எஸ் எஸ் ஊர்வலத்திற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்துள்ளதாகவும், குறிப்பாக சமூக விரோதிகள் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும், பொது சொத்துக்களை சேதப்படுத்தும் வாய்ப்புள்ளதாக மத்திய, மாநில அரசுகளின் உளவுத்துறை அறிக்கை அளித்து இருப்பதாகவும், அந்த அறிக்கைகளை புறம் தள்ள முடியாது என்பதாலும் தான் ஆர்எஸ்எஸ் அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
மேலும் காந்தி ஜெயந்தி கொண்டாடக்கூடாது என்பது காவல்துறையின் நோக்கமல்ல என்று தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி காந்தி ஜெயந்தி அன்று தான் ஊர்வலம் செல்ல அனுமதி மறுக்கிறீர்களா? வேறு தேதியில் ஊர்வலம் நடத்தினால் காவல்துறை அனுமதி அளிக்குமா? என கேள்வியை எழுப்பினார்.. அதற்கு பதில் அளித்த காவல்துறை தரப்பு வழக்கறிஞர், அவ்வாறு அவர்கள் வேறு தேதியில் நடத்துவதாக மனு அளித்தால் அதுவும் பரிசீலித்து முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
பின்னர் ஆஜரான அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜின்னா, பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பு தடைக்கு பிறகு சென்னை வடக்கு மண்டலத்தில் மட்டும் பாஜகவினருக்கு சொந்தமான 402 வீடுகள், 65 வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகளுக்கு பாதுகாப்பு அளிக்கப்படுவதாகவும், என்ஐஏ சோதனை பெட்ரோல் குண்டு வீச்சு ஆகியவற்றிற்கு பிறகு 52,000 காவல்துறையினர் தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதாக தெரிவித்தார்.
அப்போது நீதிபதி தற்போது செய்திகள், காவல்துறை விளக்கம் மனுதாரர்களுக்கு சொந்தமான இடங்களில் அச்சுறுத்தல் ஆகியவற்றை கருத்தில் கொண்டு மாற்று தேதியில் ஊர்வலம் நடத்த ஆர்எஸ்எஸ் அமைப்பிற்கு அனுமதி வழங்க நீதிபதி அறிவுறுத்தினார். அதனை ஏற்றுக் கொண்ட ஆர் எஸ் எஸ் அமைப்பு 4 தேதிகளை நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
அதில் நவம்பர் 6ஆம் தேதி ஊர்வலம் நடத்த ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு நீதிபதி அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளார். அந்த தேதியில் ஆர்எஸ்எஸ் அமைப்பு ஊர்வலம் நடத்தலாம் என்றும், அதற்கு காவல்துறை அனுமதி அளிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டு இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை அக்டோபர் 31ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
அதற்கு முன்பாக ஆர்எஸ்எஸ் அமைப்பின் நவம்பர் 6 ஊர்வலத்திற்கு காவல்துறை அனுமதி அளிக்க வேண்டும், அதனை அறிக்கையாகவும் தாக்கல் செய்ய வேண்டும். ஒருவேளை அந்த ஊர்வலத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்தால் அதற்கு அடுத்த நாளே இந்த தமிழக அரசுக்கு எதிரான இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணை தொடரும் என்று நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்து வழக்கு விசாரணையை ஒத்தி வைத்துள்ளார்.