பல்லவர், சோழர், விஜயநகர ஆட்சிக் கால பாரம்பரியம் கொண்ட பகுதியாக ஆற்காடு உள்ளது. ராபர்ட் கிளைவ் ஆற்காட்டை கைப்பற்றியதன் நினைவாக பாலாற்றங்கரையில் டெல்லி கேட் அமைக்கப்பட்டுள்ளது. ஆறு காடுகள் சூழ்ந்து இருந்ததால் ஆறு காடு என அழைக்கப்பட்டு பின்னர் அதுவே மருவி ஆர்க்காடு ஆனதாக கூறப்படுகிறது. தொகுதியின் முக்கிய தொழிலாக விவசாயம் உள்ளது. ஆற்காடு சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் 2 முறை வெற்றி பெற்றுள்ளது. திமுக மற்றும் அதிமுக தலா 6 முறை தொகுதியை கைப்பற்றியுள்ளன.
பாமக ஒரு முறை வென்றுள்ளது. தற்போதய எம்எல்ஏ திமுகவின் ஜெ.எல். ஈஸ்வரப்பன். ஆற்காடு தொகுதியில் மொத்தம் 2,60,135 வாக்காளர்கள் உள்ளனர். ஆற்காடு பகுதியில் கிச்சிலி சம்பா அரிசி அமோகமாக விளைந்த நிலையில் பாலாற்றில் தண்ணீர் இல்லாததால் விவசாயமும் அரிசி தொழிற்சாலைகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே மீண்டும் விவசாயம் செழிக்க நதிகளை பாலாற்றுடன் இணைக்க வேண்டும் என விவசாயிகள் கூறுகின்றனர். போக்குவரத்து நெரிசலை தவிர்க்க சாலைகளையும், பேருந்து நிலையத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
ஆர்க்காடு தரைப்பாலத்தில் சரி செய்வதுடன் புதிய மேம்பாலத்தை கட்டித்தர வேண்டும் என்றும் மக்கள் வலியுறுத்துகின்றனர். ஆற்காடு-ஆரணி புறவழிச்சாலை அமைக்க வேண்டும் என்றும் மக்கள் தெரிவிக்கின்றனர். ஆற்காட்டில் அரசு கலைக் கல்லூரி, தொழில்நுட்ப கல்லூரியும் அமைக்க வேண்டும் என்பதும், வேலைவாய்ப்புக்காக தொழிற்சாலைகள் உருவாக்கப்பட வேண்டும் என்பது மக்களின் விருப்பமாக உள்ளது. பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்த வேண்டும் என்று மக்கள் கூறுகின்றனர். நகரி-திண்டிவனம் ரயில் பாதை திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும் என்றும் கூறுகின்றனர்.