Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

ஆற்றில் அடித்து செல்லப்பட்ட நபர்…. செல்பி மோகத்தால் நடந்த விபரீதம்…. தேடும் பணி தீவிரம்…!!!

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பூண்டி ஏரியின் நீர்மட்டம் உயர்ந்ததால் பாதுகாப்பு கருதி உபரி நீர் கொசஸ்தலை ஆற்றில் திறந்து விடப்பட்டது. இதனால் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் ஆற்றங்கரை ஓரம் வசிக்கும் பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்து யாரும் ஆற்றில் குளிக்கவும் கூடாது என கூறியிருந்தார். நேற்று முன்தினம் ஆரிக்கம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த நவீன் குமார்(20) என்பவர் தனது நண்பர்களுடன் திருக்கண்டலம் தடுப்பணையின் மேற்பகுதிக்கு சென்று செல்பி எடுத்ததாக தெரிகிறது.

அப்போது எதிர்பாராதவிதமாக கால் தவறி ஆற்றில் விழுந்த நவீன்குமார் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டதால் அவரது நண்பர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து அறிந்த தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு சென்று ட்ரோன் கேமரா, பைபர் படகு மூலம் நவீன் குமாரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |