கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கண்டாச்சிமங்கலம் கிராமத்திற்கு அருகே மணிமுத்தாறு செல்கிறது. இந்த ஆற்றுக்கும், ஆற்றில் இருந்து பிரிந்து செல்லும் மணிமுத்தா ஓடைக்கும் இடையே விவசாய நிலம் இருப்பதால் ஓடையை கடந்து விவசாயிகள் விளைநிலத்திற்கு சென்று வருவது வழக்கம்.
நேற்று முன்தினம் அதே ஊரில் வசிக்கும் விவசாயிகளான மகாலிங்கம், வீரமுத்து, அவரது மனைவி கொளஞ்சி, ராஜமாணிக்கம் ஆகியோர் ஓடை வழியாக கால்நடைகளை ஒட்டி விவசாய நிலத்திற்கு சென்றனர். இதனையடுத்து வேலை முடிந்து அவர்கள் மாலையில் வீடு திரும்ப முயன்ற ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஓடையில் தண்ணீர் அதிகமாக சென்றதால் வீடு திரும்ப முடியாமல் சாப்பிட உணவு இன்று இரவு முழுவதும் விவசாய நிலத்தில் உள்ள தகர கொட்டகையில் தங்கி இருந்தனர்.
இதுகுறித்து அவர்கள் தியாகதுருகம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்தி சுமார் 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு நான்கு பேரையும் பத்திரமாக மீட்டனர். மேலும் மேய்ச்சலுக்கு ஒட்டி செல்லப்பட்ட 7 பசு மாடுகளும், ஒரு கன்றுக்குட்டியும் மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.