காவிரி ஆற்றை குறித்து ஐஐடி நடத்திய ஆய்வில் மருத்துவ மாசுப் பொருட்களும், உலோக மாசுக்களும் அதிகளவு கலந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இதனால் அன்புமணி ராமதாஸ் ஆற்றுநீர் தூய்மை திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசியதாவது, “அதிக அளவிலான மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் காவிரிக் கரையோரமாக உள்ளன. மேலும் சாயப் பட்டறைகள், துணி நிறுவனங்கள், வேதிப்பொருள் ஆலைகள், சர்க்கரை ஆலைகள் என ஏராளமான தொழிற்சாலைகள் அந்த இடத்தில் செயல்பட்டு வருகின்றன.
இதனால் இங்கிருந்து சுத்திகரிக்கப்படாமல் கழிவுப் பொருட்கள் காவிரி நீரில் கலந்து கழிவுநீர் சாக்கடையாக மாறி வருகிறது. எனவே காவிரி ஆற்றை தூய்மைப்படுத்தவும், ஆற்று பகுதியில் உள்ள தொழிற்சாலைக் கழிவுகளை முழுமையாக சுத்திகரிக்கப்படுவதை உறுதிசெய்யவும் சிறப்பு திட்டம் ஒன்றை தமிழக அரசு வகுத்து செயல்படுத்த வேண்டும். மேலும் இதற்கு மத்திய அரசு நிதி உதவி அளிக்க வேண்டும்” என்றும் தெரிவித்துள்ளார்