வெடி விபத்தில் வியாபாரி உள்பட 8 பேர் காயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆசாரிபள்ளம் பகுதியில் புனித மிக்கேல் அதிதூதர் ஆலயம் அமைந்துள்ளது. கடந்த 23-ஆம் தேதி திருவிழா தொடங்கியதால் கோவில் வளாகத்தில் தற்காலிகமான கடைகள் அமைக்கப்பட்டு இருந்தது. நேற்று முன்தினம் இரவு நேரத்தில் ஏராளமான பொதுமக்கள் கூடியிருந்த போது வாணவேடிக்கை பட்டாசுகள் வெடிக்கப்பட்டது. இந்நிலையில் பட்டாசுகள் மேல்நோக்கி செல்லாமல் திடீரென சரிந்ததால் ஆலய வளாகத்தில் இருந்த வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் மீது சரமாரியாக பாய்ந்தது.
இதனால் அலறியடித்து கொண்டு பொதுமக்கள் சிதறி ஓடினர். இதில் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த வியாபாரி அப்துல்(42) என்பவருக்கு படுகாயம் ஏற்பட்டது. மேலும் 7 பேர் காயமடைந்தனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்த 8 பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.