இரும்பு பொருட்களை திருடிய குற்றத்திற்காக 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வடுகபட்டியில் தனியார் காகித ஆலை அமைந்துள்ளது. இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் ஆலை வளாகத்திற்குள் புகுந்த மர்ம நபர்கள் மோட்டார் மற்றும் இரும்பு பொருட்களை திருடி விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து ஆலையின் மேற்பார்வையாளர் முருகானந்தம் என்பவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மர்ம நபர்களை தீவிரமாக தேடி வந்துள்ளனர்.
இந்நிலையில் ஆலையில் திருடிய இரும்பு பொருட்களை லோடு ஆட்டோவில் வைத்து கொண்டு சென்ற 5 பேரை காவல்துறையினர் மடக்கி பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் ஆலங்குளம் பகுதியில் வசிக்கும் மாரியப்பன், சின்னத்தம்பி, முருகேசன், முத்தையா மற்றும் கார்த்திக் என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் 5 பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் காவல்துறையினர் அவர்களிடம் இருந்த இரும்பு பொருட்களை பத்திரமாக மீட்டனர்.