ஆளுநர் பாதுகாப்பில் எந்தவிதமான சமரசமும் அரசு செய்துகொள்ளாதென தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் கூறினார்.
மயிலாடுதுறை மாவட்டம் தருமபுரம் ஆதீனவிழாவுக்குச் சென்று திரும்பும் வழியில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியின் வாகனம் சென்ற பகுதியில், அவருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருப்புக் கொடி காட்டினர். இதையடுத்து சாலையில் கருப்புக்கொடிகளை வீசினர். இச்சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு சட்டப்பேரவையின் இன்றைய கூட்டத்தில் கோஷம் எழுப்பிய அ.தி.மு.க உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். அதன்பின் பாஜக உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர்.
அதனைதொடர்ந்து இச்சம்பவம் தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கமளித்து பேசியதாவது “நேரம் இல்லா நேரத்தினை பயன்படுத்தி முக்கியமான பிரச்னையை எதிர்க் கட்சித் தலைவர், பா.ஜ.க பேரவைத்தலைவர் ஆகியோர் உரையாற்றினர். ஆளுநர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த போராட்டத்திற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக சட்ட ஒழுங்கு காவல்துறை கூடுதல் இயக்குநர் நேற்று தெளிவாக அறிக்கை அளித்துள்ளார். அந்த அறிக்கையில் இந்த போராட்டத்தில் ஆளுநர் பாதுகாப்பு வாகனங்கள் மீது கற்கள், கொடிகள் வீசியதாக கூறப்படுவதில் எந்த உண்மையும் இல்லை என்று விளக்கமளித்துள்ளார்.
அதேபோன்று ஆளுநரின் பாதுகாப்பு அதிகாரி, ஆளுநர் மற்றும் அவரது பாதுகாப்பு வாகனங்கள் மீது கற்கள், கொடிகள் வீசப்படவில்லை என தமிழ்நாடு காவல்துறை தலைவருக்கு கடிதம் அளித்துள்ளார். இதனிடையில் போராட்டம் நடத்தியவர்கள் மீது உரிய வழக்குப்பதிவு செய்யப்பட்டு சட்டப்பூர்வ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆளுநரின் பாதுகாப்புக்காக மத்திய மண்டல காவல்துறை தலைவர் தலைமையில், 2 டிஐஜிக்கள், 6 எஸ்.பி.க்கள், 6 கூடுதல் எஸ்.பி.க்கள், 21 டி.எஸ்.பி.க்கள், 52 ஆய்வாளர்கள், 102 உதவி ஆய்வாளர்கள், 1,120 காவலர்கள் பயன்படுத்தப்பட்டு பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.
போராட்டத்தில் ஈடுபட்டோரை தடுப்புகள் அமைத்து காவல்துறையினர் கட்டுக்குள் வைத்திருந்தனர். ஜனநாயக முறையில் போராட்டம் நடத்தினாலும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது. ஆளுநரின் பாதுகாப்பில் எந்த விதமான சமரசமும் அரசு செய்துக்கொள்ளாது. ஆளுநர் மீது ஒரு தூசும் விழாமல் பாதுகாப்பாக கூட்டிச்சென்றுள்ளனர். ஆகவே போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. நடக்காத ஒன்றை நடந்தது போல் கற்பனையாக கூற வேண்டாம்” என்று கூறினார்.