செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, கர்நாடக சட்டமன்றத்தில் டிசம்பர் 22ம் தேதி பேசிய முதலமைச்சர் பசவராஜ் பொம்மை மேகதாது அணை கட்டுவதற்கு இந்திய அரசு நீர்வளத்துறை ஏற்கனவே அனுமதித்து விட்டது. காவிரி மேலாண்மை ஆணையமும் அனுமதிக்க உள்ளது என்றும் கூறியுள்ளார்.
மேகதாதில் 67.16 டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட அணை கட்டுவதற்கு ஏற்கனவே ஒன்றிய அரசு நீர்வளத்துறை ஒப்புதல் அளித்துள்ளது. சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை ஒப்புதலை பெற முயன்று வருகிறோம். மேகதாது அணையினுடைய விரிவான திட்ட அறிக்கையை காவேரி மேலாண்மை ஆணையத்திற்கு அனுப்பி உள்ளோம்.
27.12.2021 அன்று நடைபெறும் காவிரி மேலாண்மை கூட்டத்தில் மேகதாது அணைக்கட்டுக்கு அனுமதி பெற கர்நாடக அரசு முயற்சியில் ஈடுபட்டு வருகிறது என்றும் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.
டிசம்பர் 27-ஆம் தேதி நடைபெற இருந்த காவேரி மேலாண்மை கூட்டம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் கூட்டத்தின் பொருள் பட்டியலில் மேகைதாது அணை இடம்பெற்று இருந்தது. இது மோடி அரசின் வஞ்சகமான சூழ்ச்சியாகும்.
கர்நாடக மாநிலத்தின் எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சி தலைவர் சிவக்குமார் தலைமையில் வரும் பத்தாம் தேதி அன்று பெங்களூரு தொடங்கி 10 நாட்கள் பல ஊர்களாக நடைபயணம் மேற்கொண்டு 19.01.2022ஆம் தேதி அன்று மேகதாது அணைகட்ட பல்லாயிரம் கணக்கானோர் பங்கேற்றும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்த போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகத்தில் ஆளும் கட்சியும், எதிர்கட்சியும் இணைந்தே மேகதாதுவில் அணை கட்டுவதற்கு துடித்து கொண்டிருக்கின்றனர்.
அணை கட்டப்ப்படுமானால் காவிரியில் தமிழகத்திற்கு ஒரு சொட்டு நீர் கூட கிடைக்காது.
ஒன்றிய பாஜக அரசு தமிழ்நாட்டிற்கு பாதகமான மேகதாது அணைகட்ட கர்நாடக அரசுக்கு ஒருபோதும் ஒப்புதல் அளிக்ககூடாது. இதில் தமிழ்நாடு அரசு எச்சரிக்கையாகச் செயல்படவேண்டும் என தெரிவித்தார்.