ஆழியாறு அணையில் இருந்து பாசன வசதிக்காக வருகின்ற ஆறாம் தேதி முதல் தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆணையிட்டுள்ளார்.
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “கோயம்புத்தூர் மாவட்டம், ஆனைமலை வட்டம், ஆழியாறு பழைய ஆயக்கட்டு இரண்டாம் போக பாசனத்திற்காக ஆழியாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என்று ஆனைமலை ஆழியாறு பழைய ஆயக்கட்டு விவசாயிகள் நல சங்கம் கோரிக்கை விடுத்தனர்.
விவசாய மக்களின் கோரிக்கையை ஏற்று, ஆழியாறு அணையில் இருந்து நவம்பர் மாதம் ஆறாம் தேதி முதல் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் 15ஆம் தேதி வரையில் 160 நாட்களுக்கு, ஆழியாறு அணையில் இருந்து 1137 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விடுவதற்கு உத்தரவிட்டுள்ளேன். அதனால் ஆனைமலை வட்டத்தில் இருக்கின்ற 6,400 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று அவர் கூறியுள்ளார்.