மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தேங்காப்பட்டணத்தில் ரப்சேல் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மீன்பிடி தொழில் செய்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 3 மகள்கள், 2 மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் ரப்சேல், சூசை ஆண்டனி என்பவருக்கு சொந்தமான படகில் ஆழ்கடலுக்கு 5 மீனவர்களுடன் தேங்காப்பட்டணம் துறைமுகத்திலிருந்து மீன் பிடிப்பதற்காக சென்றுள்ளார். இவர்கள் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது திடீரென ரப்சேல் மீது மின்னல் தாக்கியது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த சக மீனவர்கள் கடலுக்குள் குதித்தனர். இதனையடுத்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த ரப்சேலை சக மீனவர்கள் மீட்டு சிகிச்சைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றுள்ளனர்.
அங்கு ரப்சேலை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இதுகுறித்து குளச்சல் கடலோர பாதுகாப்பு குழும காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கடலோர பாதுகாப்பு குழும காவல்துறையினர் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் போது தங்களுடைய செல்போன்களை சுவிட்ச் ஆப் செய்து வைக்க வேண்டும். இதன்மூலம் இடி மற்றும் மின்னல் தாக்குததிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம் என கூறியுள்ளனர்.