ஈரோடு மாவட்டத்திலுள்ள மைலாடி வெள்ளியங்காடு பகுதியில் விவசாயியான சீனிவாசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது தோட்டத்தில் ஆழ்குழாய் கிணறு அமைத்து விவசாயம் செய்து வருகிறார் மேலும் வீட்டு உபயோகித்திருக்கும் அந்த தண்ணீரை பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. கடந்த சில நாட்களாக அந்த பகுதியில் மழை பெய்ததால் சீனிவாசன் கிணற்று தண்ணீரை பயன்படுத்தாமல் இருந்துள்ளார். நேற்று மோட்டாரை இயக்கி கிணற்றுத் தண்ணீரை எடுத்த போது கருப்பு நிறத்தில் துர்நாற்றத்துடன் தண்ணீர் வந்ததை பார்த்து சீனிவாசன் அதிர்ச்சியடைந்தார்.
இதனையடுத்து சென்னிமலை ஊராட்சி ஒன்றிய குழு துணை தலைவர் பன்னீர்செல்வம் சம்பவ இடத்திற்கு சென்று தண்ணீரை பார்த்து பெருந்துறை மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது, சாய தொழிற்சாலையில் இருந்து சுத்திகரிப்பு செய்யாமல் சாயக்கழிவுகளை வெளியேற்றியதால் ஆழ்குழாய் கிணற்றிலிருந்து கருப்பு நிறத்தில் தண்ணீர் வெளியேறி இருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.