உரிய ஆவணங்களின்றி கொண்டு வந்த 9 லட்சம் ரூபாயை பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்து கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ். மங்கலம் பகுதியில் வட்ட வழங்கல் அதிகாரி சுவாமிநாதன் தலைமையில் பறக்கும்படை அதிகாரிகள் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் அப்பகுதி வழியாக வந்த கார் ஒன்றை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அப்போது அந்த காரில் கட்டு கட்டாக 9 லட்சம் ரூபாய் இருந்துள்ளது.
இதுகுறித்து பணத்தின் உரிமையாளராக தேவி பட்டணத்தை சேர்ந்த மாரிமுத்துவிடம் விசாரித்த போது பத்திரபதிவுக்காக பணத்தை கொண்டு சென்றதாக கூறியுள்ளார். ஆனால் உரிய ஆவணங்கள் இல்லாததால் 9 லட்சத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் அதனை மாவட்ட கருவூலத்தில் ஒப்படைத்துள்ளனர். மேலும் உரிய ஆவணங்களை காண்பித்து பணத்தை பெற்றுகொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.