பெரம்பலூர் அருகே வாகன சோதனையின்போது ஆவணம் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட ரூ.81 ஆயிரத்து 500 பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பறக்கும் படை அதிகாரிகள் மற்றும் தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கோனேரிபாளையம் அருகே நான்கு ரோடு சந்திப்பில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது ஆத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்த காரை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அந்த சோதனையில் ரூ. 81 ஆயிரத்து 500 பணம் ஆவணம் இல்லாமல் கொண்டு செல்வது தெரியவந்தது.
இதையடுத்து காரில் வந்தவரிடம் பணம் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் அவர் திருச்சி மாவட்டத்தில் உள்ள நத்தம் வாடிப்பட்டி பகுதியில் வசித்து வரும் இருதயம் என்பது தெரியவந்தது. மேலும் அவர் அந்த பணத்தை அறுவடை இயந்திரம் வாங்குவதற்காக எடுத்து செல்வதாக கூறியுள்ளார். இருப்பினும் ஆவணங்கள் எதுவும் இல்லாததால் அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்து பெரம்பலூர் கருவூலத்தில் ஒப்படைத்துள்ளனர்.