தமிழகத்தில் அரசு அதிகாரிகளுக்கு ஆவின் இனிப்புகள் இலவசம் கிடையாது என அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார். ஆவின் நிறுவனத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 5 வகையான இனிப்புகளை அறிமுகம் செய்துள்ளது. இதுகுறித்து அனைத்து மாவட்ட பால் உற்பத்தியாளர்கள், பொது மேலாளர்கள் மற்றும் பால்வளத்துறை அமைச்சர் நாசர் ஆகியோர் ஆலோசனை கூட்டம் நடத்தினர். இந்நிகழ்ச்சியில் ஆவின் நிர்வாக இயக்குனர் கந்தசாமி மற்றும் ஆவின் இலஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் லட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், கடந்த ஆட்சியில் ஆவின் நிறுவனத்திற்க்கு ஏற்பட்ட நஷ்டங்கள் பற்றி பொது மேலாளர் அனைவருக்கும் தெரியும் என்றும் தலைமை சரியாக இருந்தால் எதுவும் சரியாக இருக்கும் என்று அவர் கூறினார். மேலும் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கான இனிப்புகளை அன்பளிப்பு என்று எதிர்பாராமல் விலை கொடுத்து வாங்க வேண்டும். மேலும் தீபாவளி இனிப்புகள் அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சியில் நான் பணம் கொடுத்து தான் வாங்கினேன்.
அதனைப்போலவே நிர்வாக இயக்குனரும் மற்றும் பொது மேலாளர்கள் ஆவின் பொருளை விலை கொடுத்து வாங்க வேண்டும் என்றார். இதையடுத்து விற்பனை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட்டு முந்தைய ஆட்சியில் நடந்த தவறுகள் இந்த ஆண்டு நடக்காமல் பால் உற்பத்தியாளர்களுக்கு பணம் பட்டுவாடா வழங்குவதில் கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.