Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

ஆவின் டெண்டரை ரத்து செய்ய… கலெக்டர் பெயரில் பொய்யான உத்தரவு நகல்… ஒப்பந்ததாரர் கைது…!!

ஆவின் டெண்டரை ரத்து செய்யக்கோரி வேலூர் கலெக்டர் பெயரில் பொய்யான உத்தரவு நகலை அனுப்பிய ஒப்பந்ததாரர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வேலூர் மாவட்டம், சத்துவாச்சாரியில் மாவட்ட ஆவின் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் அமைந்துள்ளது. இந்நிறுவனத்தின் நிர்வாகப்பிரிவு இமெயிலில் இருந்து கடந்த மாதம் எட்டாம் தேதி அதே நிர்வாகத்தின்  பொது மேலாளருக்கு  இமெயிலுக்கு கடிதம் ஒன்று வந்துள்ளது. பொது மேலாளர் ரவிக்குமார் அந்த மெயிலை பார்த்தபோது அதில் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியனின் கையெழுத்து போடப்பட்ட உத்தரவு நகல் இருந்தது.

அந்த உத்தரவு நகல் ஆவினில் கடந்த 2021ம் வருடம் டிசம்பரில் வெளியிட்ட 12 வகையான டெண்டர்களில் குழப்பம் இருப்பதாக புகார் வந்துள்ள நிலையில், அதை நிவர்த்தி செய்து மறு டெண்டர் விட வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டிருந்தது. கலெக்டர் அனுப்பியதாக வந்த உத்தரவு நகலில் சந்தேகப்பட்டு பொதுமேலாளர் இதுகுறித்து கலெக்டர் அலுவலக நிர்வாக அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டார். அதிகாரிகள் நடத்திய விசாரணையில், அந்த மெயிலில் வந்த உத்தரவும் பொய்யானது என்று தெரியவந்தது.

இதுதொடர்பாக கலெக்டரின் நேர்முக உதவியாளர் விஜயராகவன் வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணனிடம் புகார் அளித்தார். இப்புகாரின் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு பூபதி ராஜன் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டார். அந்த விசாரணையில் காட்பாடியை  சேர்ந்தவர் ஜெகன் என்ற ஜெயச்சந்திரன். ஆவின் ஒப்பந்ததாரரான இவர் பொய்யான உத்தரவு நகலை அனுப்பியது தெரிய வந்துள்ளது.

இதையடுத்து காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளனர். இதுகுறித்து காவல் துறையினர் கூறியதாவது, ஜெய்சந்திரன் ஆவின் ஒப்பந்ததாரராக இருந்துள்ளார். இதனால் இவரின் மீதான செயல்பாடுகள் குறித்து ஆவின் நிர்வாகத்திற்கு புகார் சென்றுள்ளதால் இவருடைய ஒப்பந்தம் ரத்து செய்யப்படலாம் என்ற எண்ணத்தில் பொய்யான உத்தரவு நகலை அனுப்பினார். இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றோம் என்று தெரிவித்தனர்.

Categories

Tech |