Categories
அரசியல்

ஆவின் பால் கிடைப்பதில்லை…. முதல்வர் நடவடிக்கை எடுப்பாரா….? ஓ.பி.எஸ் வலியுறுத்தல்….!!!

சீரான முறையில் பால் வினியோகம் செய்யப் படுவதில்லை என ஓபிஎஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழக எதிர்க்கட்சித் துணைத் தலைவர் மற்றும் அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் ஆவின் பால் மற்றும் பால் பொருட்கள் மற்ற சந்தைகளில் விற்பனை செய்யப்படுவதை விட விலை குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் மக்கள் ஆவின் பாலகத்தையே பெரும்பாலும் நாடுகின்றனர். இந்நிலையில் தி.மு.க ஆட்சிக்கு வந்தால் பாலின் விலை குறைக்கப்படும் என தேர்தல் வாக்குறுதியாக அறிவித்திருந்தது. அதன்படி தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன் ஒரு லிட்டர் பாலின் விலையை 3 ரூபாய் குறைத்தது.

இப்படி பாலின் விலையை குறை‌த்த தி.மு.க சில மாதங்களிலேயே பால் பொருட்களின் விலையை அதிகரித்து விட்டது. அதாவது ஒரு லிட்டர் தயிர் 27 ரூபாயிலிருந்து 30 ரூபாய் ஆகவும், ஒரு லிட்டர் நெய்யின் விலை 515 ரூபாயிலிருந்து 530 ரூபாயாகவும், பாதாம் பவுடர் 200 கிராம் 80 ரூபாயிலிருந்து 100 ரூபாயாகவும், ஐஸ்கிரீம்களின் விலை 5 ரூபாய் வரையிலும்  உயர்த்தப்பட்டது. இந்த விலை உயர்வை அறிவித்தவுடனே  உடனடியாக விலையை குறைக்க வேண்டும் என நான் அரசுக்கு கோரிக்கை விடுத்தேன். ஆனால் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனையடுத்து பால் குறைந்த அளவிலேயே வினியோகிக்கப்படுவதாகவும்,  காலை 8 மணிக்கு மேல் பால் கிடைப்பதில்லை எனவும் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. அதன்பிறகு ஆவின் பாலகங்களில் ஒரு லிட்டர் நெய் மட்டுமே கிடைப்பதாகவும், 100 கிராம், 200 கிராம் அளவிலான நெய் விற்பனை செய்யப்படவில்லை எனவும்,  பால்கோவாக்கள் சிறிய பாக்கெட்டுகளில் கிடைப்பதில்லை எனவும் கூறப்படுகிறது.

இதன் காரணமாக ஏழை, எளிய மக்கள் அதிக விலை கொடுத்து நெய், பால்கோவா உள்ளிட்ட பால் பொருட்களை வாங்க முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே தி.மு.க அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து பால் வினியோகம் மக்களுக்கு சீராக கிடைக்கவும், பால் பொருட்கள் 100 கிராம் மற்றும் 200 கிராம் என்ற அளவில் கிடைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என ஓ.பி.எஸ் அ.தி.மு.க சார்பில் கோரிக்கை விடுத்துள்ளார்.

Categories

Tech |