Categories
மாநில செய்திகள்

ஆவின் பால் லாரி உரிமையாளர்கள் திடீர் வேலைநிறுத்தம் : விநியோகம் பாதிக்காது – பால்வளத்துறை ஆணையர் உறுதி!

தமிழ்நாடு ஆவின் டேங்கர் லாரி ஒப்பந்த உரிமையாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகம் முழுவதும் தமிழ்நாடு ஆவின் டேங்கர் லாரி ஒப்பந்த உரிமையாளர்கள் சங்கம் சார்பில் வேலைநிறுத்த எச்சரிக்கை அறிவிப்பு நேற்று இரவு வெளியிடப்பட்டது. நள்ளிரவு முதல் ஆவின் டேங்கர் லாரிகள் வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கி உள்ளதாக சங்கத்தின் தலைவர் சுப்பிரமணி நேற்றிரவு தெரிவித்தார். தமிழக அரசின் ஆவின் பால் நிறுவனம் தனியார் டேங்கர் லாரிகள் மூலம் மாநிலம் முழுவதும் தினமும் 30 லட்சம் லிட்டர் பால் சப்ளை செய்யப்பட்டு வருகிறது.

ஆவின் பால் சப்ளை செய்வதற்கு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை தனியார் டேங்கர் லாரிகளுடன் ஒப்பந்தம் போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆவின் பால் லாரிகளை இயக்குவதற்கான ஒப்பந்தம் கடந்த 2018ம் ஆண்டுடன் முடிவடைந்ததை அடுத்து ஒப்பந்தத்தை அரசு நீட்டிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. மேலும் சத்துணவு டெண்டர் முறைகேடு புகாரில் சிக்கிய கிறிஸ்டி நிறுவனத்துக்கு முழு ஒப்பந்ததையும் வழங்கப்போவதாக தகவல் வெளியானது.

இதனை கண்டித்து தமிழ்நாடு ஆவின் டேங்கர் லாரி ஒப்பந்த உரிமையாளர்கள் சங்கம் சார்பில் வேலைநிறுத்த எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதுதொடர்பாக சென்னை நந்தனத்தில் உள்ள ஆவின் இல்லத்தில் அதிகாரிகளுடன் ஆவின் பால் லாரி உரிமையாளர்கள் நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர் அதில் ஆவின் டேங்கா் லாரிகளுக்கான புதிய விலைப்புள்ளி ஒப்பந்தத்தை அமல்படுத்தக் கோரிக்கை வைத்தனர் ஆனால் பேச்சுவார்த்தையில் சுமுக முடிவு எடுக்கவில்லை.

இதனால் லாரி உரிமையாளா்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் ஆவின் நிர்வாக தரப்பில் புதிய ஒப்பந்த நடவடிக்கைகளை கைவிடவில்லை என்றும், நிர்வாகத்துக்கு சொந்தமாக 53 டேங்கர் லாரிகள் இருக்கின்றன என்றும், அதனை வைத்து நிலைமையை சமாளிப்போம் என்று தெரிவிக்கின்றனர்.

மேலும் ஆவின் பால் டேங்கர் ஒப்பந்ததாரர்கள் வேலை நிறுத்தத்தால் சென்னை மாநகரம் மற்றும் அனைத்து மாவட்டங்களிலும் நுகர்வோருக்கு எவ்வித பாதிப்பும் இன்றி தங்கு தடையில்லாமல் தேவையான பால் கிடைக்க அனைத்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என பால்வளத்துறை ஆணையர் மற்றும் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணைய நிர்வாக இயக்குநர் மா. வள்ளலார் தெரிவித்துள்ளார். இதனால் பொதுமக்களுக்கு எவ்வித பிரச்னையும் ஏற்படாது என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |