ஆசனூர் அருகே காட்டு யானை ஒன்று ஆவேசமடைந்து காரின் கண்ணாடியை உடைத்தது.
ஈரோடு மாவட்டத்திலுள்ள தேசிய நெடுஞ்சாலையில் கரும்பு பாரம் ஏற்றி வரும் லாரிகளின் டிரைவர்கள் ரோட்டோரம் கரும்பு கட்டுகளை போட்டு பழகி விட்டதால் யானைகள் அடிக்கடி ரோட்டுக்கு வந்து விடுகின்றது. இந்த நிலையில் நேற்று ஆசனூர் அருகே இருக்கும் தேசிய நெடுஞ்சாலையில் யானைகள் லாரிகளை எதிர்பார்த்து உலா வந்தது. இதனால் எந்த வாகனமும் அவ்வழியாக செல்ல முடியவில்லை. ரோட்டிலேயே வரிசையாக வாகனங்களை நிறுத்திக் கொண்டார்கள்.
இது பற்றி தகவல் அறிந்து வந்த வனத்துறையினர் யானைகளை காட்டுக்குள் விரட்ட முயன்றார்கள். அப்பொழுது ஆவேசமடைந்த ஒரு யானை ரோட்டில் நின்று கொண்டிருந்த ஒரு காரை நோக்கி ஆவேசமாக ஓடி வந்து முன்பக்க கண்ணாடியை துதிக்கையால் அடித்து உடைத்தது. காருக்குள் இருந்தவர்கள் பயத்தில் கத்தினார்கள். உடனடியாக வனத்துறையினர் பட்டாசை வெடித்து யானையை விரட்டினார்கள். இச்சம்பவத்தால் காருக்குள் இருந்தவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. அதன் பின் சிறிது நேரம் கழித்து வாகனங்கள் அங்கிருந்து செல்லத் தொடங்கியது.