பிரபல ஹாலிவுட் நடிகையான லூயிஸ் பிளெட்சர்(88)) பிரான்சிலுள்ள வீட்டில் உடல்நலகுறைவு காரணமாக உயிரிழந்தார். கடந்த 1958 ஆம் வருடம் லூயிஸ் பிளெட்சர் தொலைக்காட்சி தொடர்கள் வாயிலாக தன் நடிப்பு பயணத்தை துவங்கினார். இதையடுத்து 1976ல் மிலோஸ் போர்மன் இயக்கத்தில் வெளியாகிய “ஒன் ப்ளூ ஓவர் தி குக்கூஸ் நெஸ்ட்” திரைப்படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
இப்படத்திற்காக சிறந்த நடிகைக்கான ஆஸ்கார் விருது அவருக்கு கிடைத்தது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி அவர் உயரிய பாப்தா, கோல்டன் குளோப் விருதுகளையும் பெற்றார். இதன் வாயிலாக ஆட்ரி ஹெப்பர்ன், லிசா மின்னெல்லி போன்றோருக்கு பிறகு ஒரே திரைப்படத்துக்காக 3 உயரிய விருதுகளை பெற்ற பெருமை லூயிஸ் பிளெட்சருக்கு கிடைத்தது.
எக்ஸார்சிஸ்ட் தி ஹெரெடிக், பயர் ஸ்டார்ட்டர், டேஸ் இன் தி வேலி, பிளவர்ஸ் இன் தி அட்டிக், கிரூயல் இண்டென்ஷன்ஸ் உட்பட பல்வேறு திரைப்படங்களில் அவர் நடித்து தன் திறமையை வெளிப்படுத்தியுள்ளார். இவருக்கு 2 மகன்கள் இருக்கின்றனர். தற்போது லூயிஸ் பிளெட்சர் மறைவுக்கு ஹாலிவுட் திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.