Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ஆஸ்பத்திரிக்கு போன் செய்து… வெடிகுண்டு வைத்துவிட்டேன்… மிரட்டிய நபர் கைது..!!!

தனியார் ஆஸ்பத்திரியில் வெடிகுண்டு வைத்ததாக மிரட்டிய செவிலியரின் கணவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கோவை மாவட்டம், பூசாரிபாளையம் நாயக்கர்தோட்டத்தில் வசித்து வருபவர் பெயிண்டர் மதிஒளி(41). இவருடைய மனைவி சரஸ்வதி(40) சிங்காநல்லூரில் உள்ள நவீன் ஆஸ்பத்திரியில் செவிலியராக பணிபுரிந்து வந்துள்ளார். இதற்கிடையில் மதி ஒளிக்கும், அவருடைய மனைவி சரஸ்வதிக்கும் இடையே அடிக்கடி குடும்ப பிரச்சனை வந்துள்ளது. சரஸ்வதி தன்னுடன் சண்டை போடுவதற்கு நவீன் ஆஸ்பத்திரியில் உள்ள ஊழியர்கள் தான் காரணம் என்று மதிஒளி கருதி அந்த மருத்துவமனையில் உள்ள தொலைபேசிக்கு அடிக்கடி தொடர்பு கொண்டு ஊழியர்களிடம் தகராறு செய்து வந்துள்ளார்.

இதனால் மன உளைச்சல் அடைந்த சரஸ்வதி கடந்த ஒரு வருடத்திற்கு முன் அந்த ஆஸ்பத்திரியில் இருந்து வேலையை விட்டு நின்றுள்ளார். ஆனாலும் மதிஒளி அந்த ஆஸ்பத்திரிக்கு அடிக்கடி தொடர்புகொண்டு ஊழியர்களிடம் சண்டை போட்டு வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 29 -ஆம் தேதி அன்று மதிஒளி நவீன் ஆஸ்பத்திரியில் உள்ள தொலைபேசிக்கு தொடர்பு கொண்டு போனை எடுத்த ஊழியர்களிடம் உங்களால தான் எனது மனைவி என்னை விட்டு பிரிந்து சென்று விட்டார் என்று தெரிவித்து சண்டைபோட்டு மருத்துவமனையில் வெடி குண்டு வைத்ததாக கூறினார்.

இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் மருத்துவமனை மேலாளர் நித்தியானந்தத்திடம் தகவல் அளித்தனர். அவர் உடனே சிங்காநல்லூர் காவல் நிலையத்தை தொடர்பு கொண்டு புகார் அளித்துள்ளார். இதனையடுத்து காவல்துறையினர், வெடிகுண்டு நிபுணர்கள் மருத்துவமனைக்கு விரைந்து வந்து சோதனை செய்து பார்த்தனர். ஆனால் வெடிகுண்டு எதுவும் இல்லை. இப்புகாரின் அடிப்படையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் வழக்கு பதிந்து தனியார் ஆஸ்பத்திரிக்கு வெடிகுண்டு வைத்ததாக மிரட்டிய பெயிண்டர் மதிஒளியை கைது செய்துள்ளனர்.

Categories

Tech |