கிராம மக்களுடன் ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் சாலை மறியலில் ஈடுபட்டதால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கடலூர் மாவட்டத்தில் உள்ள பூதவராயன்பேட்டை கிராமத்தில் தி.மு க பிரமுகரான பழனிச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லட்சுமி என்ற மனைவி உள்ளார். இவர் பூதவராயன் பேட்டை ஊராட்சி மன்ற தலைவராக இருக்கிறார். கடந்த ஓராண்டுக்கு முன்பு கடலூரில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் பழனிச்சாமியின் கழுத்து தோள்பட்டையில் இருந்த கொழுப்பு கட்டி அகற்றப்பட்டுள்ளது. இதனை அடுத்து பழனிச்சாமிக்கு உடலில் பல்வேறு பிரச்சனைகள் வந்தது.
இந்நிலையில் தனக்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக பழனிச்சாமி கூறியுள்ளார். எனவே தவறான சிகிச்சை அளித்த மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கிராம மக்களுடன் பழனிச்சாமி பெருமத்தூர் பேருந்து நிறுத்தத்தில் மறியலில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை கலைந்து போக செய்தனர். இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.