திமுகவின் தலைமை அலுலகமான அண்ணா அறிவாலயம் சென்னை தேனாம்பேட்டையில் உள்ளது. முன்னாள் முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவராகவும் இருந்த கருணாநிதி, அண்ணா அறிவாலயத்தை கட்டி சென்னையின் ஒரு முக்கிய அடையாளமாக மாற்றினார். இங்குள்ள ஒவ்வொரு அம்சமும் கருணாநிதியால் நேரில் பார்த்துக் கட்டப்பட்டது.
அதே போல் தி.மு.க.வின் அடையாளமான அண்ணா அறிவாலயத்தின் மற்றொரு சகாப்தம், தலைநகர் டெல்லியில் தற்போது கட்டப்பட்டுள்ளது. இந்த திமுக கட்சி அலுவலகத்திற்கு ‘அண்ணா – கலைஞர்’ அறிவாலயம் என்று பெயர் வைத்துள்ளனர். நாடாளுமன்றத்தில் 7 உறுப்பினர்களுக்கு மேல் உள்ள கட்சிகளுக்கு டெல்லியில் கட்சி அலுவலகம் கட்டுவதற்கு இடம் வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. அதன்படி, கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட இப்பணிகள் தற்போது முடிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் உள்ள இக்கட்டிடத்தின் அலுவலக வாயிலில் பிரம்மாண்ட தூண்களும் அண்ணா, கருணாநிதி ஆகியோரின் சிலைகளும் அமைந்துள்ளன. இந்த கட்டிடம் தொன்மையான செட்டிநாடு கட்டடக் கலையை பிரதிபலித்தாலும், நவீனத்தையும் பறைசாற்றுகிறது. இதன் கீழ்தளத்தில் பெரிய அரங்கமும், முதல் மாடியில் பிரத்யேக அறை, டிவி கேபினட்டும் உள்ளன.
இதனை தொடர்ந்து 2-வது தளத்தில் நூலகமும், செய்தியாளர்கள் அறையும் உள்ளது. மேலும் 3-வது தளத்தில் நட்சத்திர விடுதிகள் போன்ற அறைகள் கட்டப்பட்டுள்ளன. இந்த கட்டிடம் வரும் ஏப்ரல் 2ஆம் தேதி திறக்கப்பட உள்ளது. இதன் திறப்பு விழா மிக பிரம்மாண்டமாக நடக்க உள்ளது.