ஜம்மு மற்றும் காஷ்மீரின் கத்ரா நகரில் மாதா வைஷ்ணவி தேவி கோவில் இருக்கிறது. இந்த கோவிலுக்கு வருடந்தோறும் பக்தர்கள் அதிகளவில் புனித யாத்திரையாக வந்து தரிசனம் செய்து விட்டு செல்வது வழக்கம். அதன்படி புத்தாண்டை முன்னிட்டு மாதா வைஷ்ணவி தேவி பவன் பகுதி அருகே கோவில் பக்தர்கள் அதிகளவில் திரண்டுள்ளனர். அவர்களில் ஒரு பிரிவினர் இடையே அதிகாலை 2.45 மணியளவில் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து தகராறு முற்றி ஒருவரை ஒருவர் தள்ளி விட்டதில் திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டு பலர் கீழே விழுந்துள்ளனர்.
அப்போது அவர்கள் மீது பக்தர்கள் மிதித்து சென்றதால் பலர் காயமடைந்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இச்சம்பவத்தில் 12 நபர்கள் வரை உயிரிழந்துள்ளனர். மேலும் 13 பேர் காயமடைந்த நிலையில் அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர் என சமூக சுகாதார மையத்தின் மருத்துவரான கோபால் தத் கூறியுள்ளார். இந்த சோக சம்பவத்துக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். காஷ்மீரில் இறந்த பக்தர்களின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் மற்றும் காயமடைந்த நபர்களுக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்கப்படும் என்றும் பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.