இங்கிலாந்து நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் சமீபத்தில் தன் பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து, புது பிரதமரை தேர்வு செய்வதற்கான தேர்தலை ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி நடத்தி வருகிறது. இந்த பிரதமர் பதவிக்கான போட்டியில் 8 வேட்பாளர்கள் களமிறங்கியதால் 2 இறுதி வேட்பாளரை தேர்வுசெய்ய கன்சர்வேட்டிவ் எம்.பி.க்கள் பல கட்டங்களாக வாக்களித்து வருகின்றனர். அந்த அடிப்படையில் சென்ற வாரம் நடைபெற்ற 2 சுற்று தேர்தல்களில் 3 வேட்பாளர்கள் போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டு 5 வேட்பாளர்கள் அடுத்த சுற்றுக்கு முன்னேறினர். இந்த இரண்டு சுற்று தேர்தல்களிலும் இந்திய வம்சாவளியை சேர்ந்த முன்னாள் நிதி மந்திரி ரிஷிசுனக் முதலிடத்தை பிடித்து முன்னிலை வகித்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் 3-வது சுற்று வாக்குப்பதிவு நடந்தது. இவற்றிலும் ரிஷிசுனக் முதலிடத்தைப் பிடித்தாா். மொத்தம் உள்ள 358 கன்சர்வேட்டிவ் கட்சி எம்.பி.க்களில் 115 பேர் அவருக்கு ஆதரவாக வாக்களித்தனர். பின் அவருக்கு அடுத்தப்படியாக வர்த்தக மந்திரியாக உள்ள பென்னி மோர்டன்ட்டுக்கு 82 வாக்குகள் கிடைத்தது. வெளியுறவுத்துறை செயலாளர் லிஸ் டிரஸ்சுக்கு 71 வாக்குகளும், சமூகநலத்துறை முன்னாள் மந்திரி கெமி படேனோச்சுக்கு 58 வாக்குகளும், எம்.பி. டாம் டுகென்தாட்டுக்கு 31 வாக்குகளும் கிடைத்தது. இதில் குறைவான வாக்குகளை பெற்ற டாம்டுகென்தாட் போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டார். இதன் வாயிலாக பிரதமர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கையானது 4-ஆக குறைந்துள்ளது.