உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனாவால் விளையாட்டு வீரர்கள், திரைப்பிரபலங்கள், பல நாட்டு தலைவர்கள் என அனைவரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் ஐரோப்பியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா, ஆசியா உள்ளிட்ட நாடுகளும் கொரோனா பாதிப்பில் இருந்து மீள முடியாமல் தவித்து வருகிறது. இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் தனது தாயாரான மகாராணி இரண்டாம் எலிசபெத் வசிக்கும் வின்ட்சர் பகுதியில் அவரை சந்தித்து விட்டு திரும்பினார்.
இதையடுத்து இளவரசர் சார்லசுக்கு அடுத்த இரண்டு நாட்களில் கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இருப்பினும் மகாராணி எலிசபெத் பரிசோதனை மேற்கொண்டாரா ? என்பது குறித்த தகவல் எதுவும் தெரியவில்லை. இந்த நிலையில் எலிசபெத் ராணிக்கும் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரண்மனை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளது. அதோடு மட்டுமில்லாமல் எலிசபெத் மகாராணிக்கு குளிர் உள்ளிட்ட அறிகுறிகள் காணப்படுவதாகவும் கூறப்படுகிறது.