இங்கிலாந்து VS இந்தியா அணிகளுக்கு இடையிலான 5வது டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. இதுவரை 4 போட்டிகள் முடிவடைந்த சூழ்நிலையில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கிறது. கடைசி டெஸ்ட்போட்டியில் இங்கிலாந்து அணிக்கு 378 ரன்களை, இந்தியாவானது வெற்றி இலக்காக நிர்ணயித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. 2-வது இன்னிங்சை விளையாடிவரும் இங்கிலாந்து அணியானது 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 259 ரன்கள் எடுத்திருக்கிறது. இதில் பும்ரா 2விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதன் வாயிலாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ்-ன் 40 வருடகால சாதனையை பும்ரா முறியடித்து இருக்கிறார். இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் அதிகமான விக்கெட்டுகளை கைப்பற்றிய இந்திய வீரர்கள் பட்டியலில் கபில் தேவ்வை பின்னுக்கு தள்ளி பும்ரா முன்னேறியுள்ளார். கடந்த 1981-1982 ஆம் வருடம் இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் கபில்தேவ் 22 விக்கெட்டுகள் எடுத்து இருந்தார். அச்சாதனையை இப்போது பும்ரா முறியத்துள்ளார். இதற்கு அடுத்தப்படியாக புவனேஸ்வர்குமார் இருக்கிறார்.
அவர் 2014 ஆம் வருடம் இங்கிலாந்து அணிக்கு எதிராக 19 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அதன்பின் ஜாகீர் கான்(2007), இஷாந்த சர்மா(2018) 18 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கின்றனர். அத்துடன் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென்ஆப்பிரிக்கா (SENA) போன்ற நாடுகளில் 100 விக்கெட்டுகளுக்கு மேல் எடுத்த 6வது இந்திய வீரர் என்ற சாதனையையும் பும்ரா படைத்துள்ளார். இந்திய வீரர்களில் அனில்கும்ளே (141), இஷாந்த் சர்மா (130), ஜாகீர் கான் (119), முகமது சமி (119) கபில்தேவ் (119) போன்றோர் இப்பட்டியலில் இருக்கின்றனர்.