கடலூர் மாவட்டம் திட்டக்குடி அரசு ஆஸ்பத்திரியில் கலெக்டர் பால சுப்பிரமணியம் திடீரென்று ஆய்வு மேற்கொண்டார். இந்நிலையில் புற நோயாளிகள் பிரிவு, உள் நோயாளிகள் பிரிவு போன்றவற்றை ஆய்வு மேற்கொண்ட அவர், மருத்துவமனையில் உரியமுறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறதா..? என நோயாளிகளிடம் கேட்டறிந்தார். இதையடுத்து பெண்கள் பிரிவில் ஆய்வு மேற்கொண்ட கலெக்டர் பால சுப்பிரமணியம், பிரசவமான பெண்களிடம் உங்களுக்கு மருத்துவம் சரியான முறையில் நடக்கிறதா..?, வேறு ஏதாவது உதவிகள் தேவையா..? என கேட்டறிந்தார். அப்போது அங்கு பணியிலிருந்த மருத்துவர்களிடம் மருத்துவமனையை எப்போதும் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்துகொள்ள வேண்டும்.
மேலும் நோயாளிகளுக்கு நல்லமுறையில் சிகிச்சையளிக்கவேண்டும் என்று அவர் கூறினார். அதனை தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது, திட்டக்குடி அரசு மருத்துவமனை படிப்படியாக தரம்உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அத்துடன் திட்டக்குடி ஆஸ்பத்திரியில் அறுவை சிகிச்சை மையமானது கூடியவிரைவில் துவங்கப்படும். மேலும் அரசு மருத்துவமனைக்கு நகராட்சி வாயிலாக துப்புரவு பணியாளர்கள் நியமனம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கூறினார். அப்போது இணை இயக்குனர் ரமேஷ் பாபு, திட்டக்குடி தலைமை மருத்துவர் சேவானந்தம், தாசில்தார் கார்த்திக், நகராட்சி ஆணையாளர் ஆண்டவர், நகராட்சி தலைவர் வெண்ணிலா, துணைத் தலைவர் பரமகுரு, தி.மு.க. ஒன்றிய செயலாளர் பட்டூர் அமிர்தலிங்கம் போன்றோர் உடனிருந்தனர்.