கால்நடை மருத்துவமனை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருப்பூந்துருத்தி கிராமத்தில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான இடத்தில் கடந்த 2018-ஆம் ஆண்டு நபார்டு வங்கி திட்டத்தின் கீழ் 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கால்நடை மருத்துவமனை கட்டுவதற்கு அதிகாரிகள் முடிவு செய்தனர். இந்நிலையில் மருத்துவமனை கட்டுவது குறித்து ஆய்வு செய்வதற்காக தாசில்தார் நெடுஞ்செழியன், வருவாய் ஆய்வாளர் மஞ்சு, கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிட்ட பலர் வந்து ஆய்வு செய்தனர்.
இதனை பார்த்த கிராம மக்கள் இங்கு கால்நடை மருத்துவமனை கட்ட கூடாது என்று கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட ஆட்சியர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.