சென்னையின் 2வது விமானநிலையம் காஞ்சீபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் அமைக்கப்படும் என மத்திய-மாநில அரசுகள் அறிவித்திருக்கிறது. அதன்படி காஞ்சீபுரம் தாலுகாவுக்குட்பட்ட வளத்தூர், பரந்தூர், 144 தண்டலம், நெல்வாய், மேல்படவூர், மடப்புரம், மற்றும் ஸ்ரீபெரும்புதூர் தாலுகாவுக்கு உட்பட்ட ஏகனாபுரம், எடையார்பாக்கம், குணகரம்பாக்கம், மகாதேவி மங்கலம், அக்கமாபுரம், சிங்கிலிபாடி என 12 கிராமபகுதிகளில் விமான நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பரந்தூரில் விமானம் நிலையம் அமைப்பது சென்னைக்கு மிக முக்கிய தேவை என்றும் அங்கு விமான நிலையம் அமைந்தால் தமிழகத்தில் தொழில்வளர்ச்சியும், பொருளாதார வளர்ச்சியும் கிடைக்கும் என தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிக்கை வெளியிட்டிருந்தார்.
இந்த சூழ்நிலையில் பரந்தூர் விமானநிலையம் அமைப்பதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் நேற்று பரந்தூரை அடுத்த ஏகனாபுரம் கிராமமக்கள் தங்களது வீடுகளில் கருப்புகொடி கட்டியும், கைகளில் கருப்புகொடி ஏந்தியும் கிராமத்திலிருந்து ஊர்வலமாக நடந்து வந்து ஏகனாபுரம் கிராம சாலையிலுள்ள அம்பேத்கர் சிலை அருகில் ஒன்றுகூடி திடீரென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போராட்டத்தில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள், முதியோர்கள் என 500க்கும் அதிகமானோர் பங்கேற்று தங்களது பகுதியில் விளைநிலங்களையும், குடியிருப்புகளையும், கையகப்படுத்தி அகற்றிவிட்டு விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பதாகைகளை கையில் ஏந்தியவாறு கண்டன கோஷங்களை எழுப்பினர். அத்துடன் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் ஒப்பாரி வைத்து கண்ணீர்விட்டு கதறி அழுது தங்களின் எதிர்ப்பை தெரிவித்தனர். இவ்வாறு ஏகனாபுரம் கிராம மக்களின் போராட்டம் காரணமாக பெரும்பாலான காவல்துறையினர் குவிக்கப்பட்டு இருந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.