மலைப்பகுதிகளில் உள்ள மதுபான கடைகளை ஏன் மூட உத்தரவிடக் கூடாது என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
குன்னூர் வனப்பகுதியில் 100 மீட்டர் அளவிற்கு யானை வழித்தடம் அடைக்கப்பட்டு சாலையை அகலப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு இருப்பதால் அங்கே சென்ற யானைகள் கீழே வழுக்கி விழுவது போன்ற காணொளி காட்சி வெளியாகியுள்ளது. வனவிலங்குகளை பாதுகாக்க கோரி சென்னை உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து எடுத்த வழக்கு நீதிபதிகள் பாரதிதாசன், சதீஷ்குமார் போன்றோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்துள்ளது.
அப்போது சுற்றுச் சூழல் காரணமாக வனத்துறை முதன்மைச் செயலர் சுப்ரியா சாகு சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதில் உயர்நீதிமன்ற உத்தரவு இயற்கைக்கு மாறாக யானைகள் இறப்பு, ரயில்கள் மோதி யானைகள் இறப்பு போன்றவற்றை தடுக்கும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்குரைஞர் ஜெ.ரவிந்தன், மாவட்ட ஆட்சியர்,வனம் ரயில்வே நெடுஞ்சாலை ஆகிய அரசு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் அடங்கிய குழுவை அமைத்துள்ளார்.
இந்த குழு கடந்த 22ஆம் தேதி சம்பந்தப்பட்ட பகுதியில் கூட்டு ஆய்வை நடத்தியது. அதில் யானைகள் வழித்தட பிரச்சனை விரைவில் சரி செய்யப்படும், எனவும் இது தொடர்பாக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் தொடர்பாக விரிவான பதிலை அளித்து விசாரணையில் தாக்கல் செய்வதாகவும் தெரிவித்துள்ளார். அப்போது வனப்பகுதியில் பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் மது பாட்டில்கள் குவிந்து கிடப்பது தொடர்பான இணையத்தில் வெளியான காணொளி காட்சிகள் நீதிபதிக்கு முன்பு காமிக்கப்பட்டிருந்தது.
அதை பார்த்து நீதிபதிகள் ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட சுற்றுலா மலைப்பகுதிகளில் டாஸ்மாக் கடைகளை ஏன் மூடுவதற்கு உத்தரவிட கூடாது என அரசுக்கு கேள்வி எழுப்பினர். இந்த பிரச்சினை தொடர்பாக மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் கடுமையான உத்தரவை நீதிமன்றம் பிறப்பிக்க நேரிடும் என நீதிபதிகள் எச்சரித்துள்ளனர்.மேலும் பாலக்காடு – கோயம்புத்தூர் இடையே ரயில் மோதி யானைகள் இறப்பதைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஏப்ரல் 9,10 ஆகிய தேதிகளில் நேரில் ஆய்வு செய்யப்படும் எனவும் நீதிபதிகள் தங்களது உத்தரவில் தெரிவித்தனர்.
அன்றைய தினம் மதுபாட்டில்கள் விற்பனை தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கலந்து கொண்டு உரிய விளக்கம் அளிக்குமாறு உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணை ஏப்ரல் 21 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.