வாக்கு எண்ணும் மையத்தின் முன்பு கன்டெய்னர் லாரி வெகுநேரமாக நின்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த மாதம் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றுள்ளது. இந்த தேர்தலில் வாக்குகள் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள திட்டக்குடி மற்றும் விருதாச்சலம் பகுதிகளில் உள்ள வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் காவல்துறையின் பலத்த பாதுகாப்புடன் விருதாச்சலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லூரியில் உள்ள மையத்தில் வைக்கப்பட்டு அந்த அறைக்கு சீல் வைக்கபட்டுள்ளது. இதனையடுத்து அங்கு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, துப்பாக்கி ஏந்திய காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் தமிழகத்தில் வருகின்ற மே மாதம் 2-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறயுள்ளது.
இந்நிலையில் விருதாச்சலம் வாக்கு எண்ணும் மையத்தின் அருகில் வெகுநேரமாக கன்டெய்னர் லாரி நின்றதால் பதற்றமடைந்து கட்சி நிர்வாகிகள் மையத்திற்கு வந்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கன்டெய்னர் லாரி ஓட்டுனரிடம் விசாரணை செய்துள்ளனர். அந்த விசாரணையின் போது திருப்பூரில் இருந்து சென்னைக்கு தேங்காய் நார் ஏற்றி செல்லும் வழியில் கன்டெய்னர் ஓட்டுனர் தன் சொந்த ஊரான விருதாச்சலத்தில் உள்ள தன் வீட்டிற்கு சென்றதும், அதனால் தான் கன்டெய்னர் லாரியை இந்த இடத்தில் விட்டு சென்றதும் தெரியவந்துள்ளது. அதன் பின்பு காவல்துறையினர் கன்டெய்னர் லாரி ஓட்டுநரை எச்சரித்த பிறகு அவர் அங்கிருந்து லாரியை ஓட்டி சென்றுள்ளார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.