ஆடு மேய்த்ததில் ஏற்பட்ட தகராறில் 2 ஆடுகளை வெட்டி கொலை செய்த 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தேனி மாவட்டம் போடியை அடுத்துள்ள சங்கராபுரத்தை சேர்ந்த முத்துகுமார்(26), ஜெயராம்(35), முத்துவேல் (44), முருகேஸ்வரன் (40) ஆகியோர் இணைந்து மரிமூர்புலத்தில் உள்ள தனியார் தென்னந்தோப்பில் ஆட்டுக்கிடை போட்டு சுமார் 600 ஆடுகளை மேய்த்து வந்தனர். இந்நிலையில் சம்பவத்தன்று முத்துகுமார் தென்னந்தோப்பிற்கு அருகே உள்ள நிலத்தில் ஆடுகளை மேய்த்து கொண்டிருந்தார். இதனையடுத்து போடிபுதூரை சேர்ந்த ரவிராஜா(29). பிச்சைமணி(35), முருகன்(50) ஆகியோர் அங்கு சென்றனர்.
அப்போது முத்துகுமாரிடம் நாங்கள் மாடுகள் மேய்க்கும் இடத்தில் நீங்கள் ஆடு மேய்க்கக்கூடாது என கூறி தகராறு செய்துள்ளனர். மேலும் முத்துகுமார், ஜெயராம், முத்துவேல், முருகேஸ்வரன் ஆகிய 4 பேரை தாக்கியதோடு மட்டுமல்லாமல் 2 செம்மறி ஆடுகளையும் வெட்டி கொலை செய்தனர். இதில் காயம் அடைந்த 4 பேர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இச்சம்வம் குறித்து முத்துகுமார் அளித்த புகாரின் அடிப்படையில் முருகன், பிச்சைமணி, ரவிராஜா ஆகிய 3 பேர் மீது வழக்குபதிவு செய்து கைது செய்துள்ளனர்.