திண்டுக்கல்லில் கொரோனா ஊராடங்கினால் வாழை இலைகள் தேக்கமடைந்துள்ளதாகவும், விலை வீழ்ச்சி அடைந்துள்ளதாகவும் வியாபாரிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
திண்டுக்கல் பகுதியில் உள்ள வாழை இலைகள் சுமார் 15 நாட்கள் வரை வாடாமல் இருக்கும். இதனால் வெளி மாநிலங்களிலும், தமிழகத்திலும் இதற்கு நல்ல மவுசு உள்ளது. மேலும் திருமண மூகூர்த்தங்கள் வைகாசி மாதத்தில் அதிகமாக இருக்கும். இதனால் வாழை இலையும் அதிக அளவில் தேவைப்படும். எனவே ரூ. 2000 வரை 400 இலைகள் கொண்ட ஒரு கட்டு விற்பனையாகும். ஆனால் கோவில் திருவிழாக்கள் தற்போது கொரோனா ஊராடங்கால் நடைபெறவில்லை.
மேலும் 100 பேருக்கு மேல் திருமணத்தில் கலந்து கொள்ள முடியாது. மக்களுக்கு ஓட்டல்களில் சாப்பிடுவதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதனால் தற்போது வாழை இலையின் தேவைகள் குறைந்து விட்டது. இதன் காரணமாக விலையும் கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. அதுமட்டுமின்றி வாழை இலைகள் அதிக அளவில் தேக்கம் அடைந்துள்ளது. தற்போது ரூ.500-க்கு 400 சாப்பாட்டு இலைகள் கொண்ட ஒரு கட்டும், ரூ. 400-க்கு பெரிய இலைகள் கொண்ட கட்டும் விற்பனையாகிறது என்று வியாபாரிகள் கூறுகின்றனர்.