Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இங்க இவ்ளோ மோசமா இருக்கு..! தகவல் குடுத்தும் கேட்கல… டிரைவரின் தர்ணாவால் பரபரப்பு..!!

திண்டுக்கல்லில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியின் மீது அமர்ந்து டிரைவர் ஒருவர் தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள எஸ்.புதுக்கோட்டை கிராமத்தில் 400 குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு தண்ணீர் காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் விநியோகம் செய்யப்படுகிறது. இதற்காக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அந்த கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ளது. அந்த மேல் நிலை நீர் தேக்க தொட்டி சுத்தம் செய்யப்பட்டு பல மாதங்கள் இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் அப்பகுதியில் வசித்து வரும் போர்வெல் எந்திர டிரைவர் கர்ணன் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியின் மீது ஏறி பார்த்தார். அப்போது அங்கு காகம் ஒன்று தொட்டிக்குள் இறந்து கிடந்தது. மேலும் தொட்டிக்குள் புழுக்கள், பாசிகள் ஆகியவை கிடந்தது. தேக்கி வைக்கபட்டுள்ள தண்ணீரை சுகாதாரமற்ற முறையில் குடித்தால் பல்வேறு நோய்கள் கிராம மக்களுக்கு ஏற்படும் வாய்ப்பு உள்ளது என கர்ணன் கூறினார். இதுகுறித்து சுகாதாரத்துறையினர் மற்றும் ஊராட்சி மன்ற அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.

ஆனால் அதிகாரிகள் யாரும் நீண்ட நேரம் ஆகியும் அங்கு வரவில்லை. இதனால் கோபமடைந்த அவர் திடீரென மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் மீது அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். மேலும் தொட்டியை சுத்தம் செய்ய வேண்டுமென்றும், அதிகாரிகள் உடனடியாக அங்கு வர வேண்டும் என்றும் வலியுறுத்தினார். இதுகுறித்து தகவலறிந்து வந்த நிலக்கோட்டை துணை வட்டார வளர்ச்சி அலுவலர் புவனேஸ்வரி, நிலக்கோட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் வசந்தா, ஊராட்சி செயலாளர் ஜெய்கணேஷ், பச்சமலையான்கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் காளிதாஸ் ஆகியோர் கர்ணனிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி சுத்தம் செய்யப்படும் என்றும் வாக்குறுதி அளித்தனர். இதையடுத்து கர்ணன் கீழே இறங்கி வந்தார். இதனைத் தொடர்ந்து பிளீச்சிங் பவுடர் தூவி மேல்நிலை நீர்தேக்க தொட்டி சுத்தம் செய்யப்பட்டது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Categories

Tech |