திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள காந்தி மார்க்கெட் காய்கறி வியாபாரிகளுக்கு நேற்று முன்தினம் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
கொரோனா பரவலை தடுப்பதற்கு திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் சுகாதார நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதேப்போல் சிறப்பு முகாம் குடியிருப்பு பகுதிகளில் நடத்தி 45 வயது மேற்பட்ட மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் கொரோனா நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பொதுமக்கள் அதிகம் செல்லக்கூடிய இடங்களில் ஒன்றான காய்கறி மார்க்கெட் வியாபாரிகளுக்கு தடுப்பூசி போடுமாறு மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி உத்தரவிட்டார். அதன்படி கொரோனா தடுப்பூசி முகாம் காந்தி மார்க்கெட் காய்கறி வியாபாரிகளுக்கு மலையடிவாரம் சீனிவாச பெருமாள் கோவில் வளாகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது.
இந்த முகாமிற்கு மாநகராட்சி கமிஷனர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். முகாம் நகர் நல அலுவலர் லட்சிய வர்ணா முன்னிலையில் நடைபெற்றது. இதில் 40 வயதுக்கு மேற்பட்ட சாலையோர வியாபாரிகள், காய்கறி வியாபாரிகள், சுமை தூக்கும் தொழிலாளர்கள் ஆர்வமுடன் வந்து தடுப்பூசி போட்டுக் கொண்டனர். அதே பகுதியில் வசிக்கும் பொதுமக்களும் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். இந்த முகாமில் தடுப்பூசி மொத்தம் 120 பேருக்கு போடப்பட்டது. அனைவருக்கும் அதற்கு முன்னதாக பரிசோதனை செய்யப்பட்டது. சுகாதார ஆய்வாளர்கள் ரெங்கராஜன், முருகையா ஆகியோர் முகாமில் கலந்து கொண்டனர்.