திண்டுக்கல் சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையத்தை மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி நேரில் சென்று ஆய்வு செய்தார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் நத்தம், ஒட்டன்சத்திரம், ஆத்தூர், வேடசந்தூர், திண்டுக்கல், நிலக்கோட்டை, பழனி என 7 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. இந்த 7 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வாக்கு எண்ணும் மையம் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு முத்தனம்பட்டி அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வாக்கு எண்ணும் மையத்தை மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான விஜயலட்சுமி நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது 7 சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்கு பதிவு நிறைவு பெற்றதும் வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்டு கல்லூரியில் வைக்கப்படும்.
வாக்குப்பதிவு எண்ணிக்கை நடைபெறும் இடம், வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்படும் அறை ஆகியவற்றை மாவட்ட ஆட்சியர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டறிந்து அந்த அறைகளை ஆய்வு செய்தார். பின்னர் மாவட்ட ஆட்சியர் அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது தேர்தல் அலுவலர்கள், நில அளவை உதவி இயக்குனர் அன்பு செல்வன் ஆகியோர் உடனிருந்தனர்.