2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் சென்னை வேளச்சேரி தொகுதியில் போட்டியிடலாம் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.
கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் மக்கள் நீதி மையம் சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டாலும் கமலஹாசன் போட்டியிடவில்லை. இந்நிலையில் மதுரையில் சமீபத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட கமல் எதிர்வரும் தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்திதிருந்தார். இதையடுத்து கமலஹாசன் களமிறங்கிய சென்னை வேளச்சேரி தொகுதி சிறந்த தேர்வாக இருக்கும் என்று மக்கள் நீதி மையத்தின் மூத்த நிர்வாகிகள் கருதுகின்றனர்.
இது குறித்து கட்சித் தலைவரான கமலஹாசனின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக மக்கள் நீதி மைய நிர்வாகிகள், இருப்பினும் போட்டியிடும் தொகுதி குறித்து கமல் இறுதி முடிவை எடுப்பார் என்று கூறியுள்ளனர். 3 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்களை கொண்ட வேளச்சேரி தொகுதியில் கமலின் கொள்கையை ஆதரிக்கும் இளைஞர்கள், தகவல் தொழில்நுட்ப துறை ஊழியர்கள், நடுத்தர மக்கள், ஓய்வு அரசு ஊழியர்கள் அதிக அளவில் உள்ளனர்.
வேளச்சேரியை உள்ளடக்கிய தென் சென்னை நாடாளுமன்றத் தொகுதியில் 2019ஆம் ஆண்டு போட்டியிட்ட மக்கள் நீதி மையம் வேட்பாளர் ரங்கராஜனுக்கு ஒரு லட்சம் வாக்குகளுக்கு மேல் கிடைத்தது. இதில் வேளச்சேரியில் மட்டும் 23 ஆயிரத்து 99 வாக்குகள் கிடைத்ததால் கமல் இங்கு போட்டியிடலாம் என்று எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 2019ஆம் ஆண்டு போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே மக்கள் நீதி மையத்திற்கு 15 லட்சத்து 76 ஆயிரம் வாக்குகள் அதாவது 3.7 2 விழுக்காடு வாக்குகள் கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.