100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள தோப்பு புறம்போக்கு பகுதியில் பண்ணை குட்டை அமைப்பதற்காக 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் சென்றுள்ளனர். இந்நிலையில் அங்குள்ள மீனவர் கிராமத்தில் வசிப்பவர்கள், இந்த இடத்தில் வீடு கட்டுவதற்காக அரசிடம் கேட்டுள்ளதாகவும், அதனால் குளம் வெட்ட அனுமதிக்க மாட்டோம் என்றும் கூறியுள்ளனர். இதனையடுத்து 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் வேதாரண்யம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு, வேலை செய்ய அனுமதி கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அதன்பின் ஊராட்சி மன்ற தலைவர், துணைத் தலைவர், ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சி ஒன்றிய ஆணையர் மற்றும் பணி மேற்பார்வையாளர் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். மேலும் ஊராட்சி ஒன்றிய ஆணையர் அந்த இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்து தொழிலாளர்களுக்கு வேலை வழங்குவதாக கூறியுள்ளார். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர்.