நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள தகட்டூர் அஞ்சலகத்தில் வாடிக்கையாளர்கள் இணைய தள வசதி முடங்கியதால் அவதி அடைந்தனர்.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள தகட்டூர் கடைத்தெருவில் அஞ்சலகம் ஒன்று உள்ளது. அந்த அஞ்சலகத்தை சுற்றுவட்டார பகுதிகளான அண்ணாப்பேட்டை, வாய்மேடு, மருதூர் தெற்கு, வண்டுவாஞ்சேரி, பஞ்சநதிக்குளம் மேற்கு ஆகிய பகுதிகளை சேர்ந்த மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த அஞ்சலகத்தில் காப்பீட்டு திட்ட வரவு செலவுகளும், சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சேமிப்பு கணக்குகளும், ஆர்.டி கணக்குகளும் உள்ளது.
கடந்த 15 நாட்களுக்கும் மேலாக இந்த அஞ்சலகத்தின் அருகில் உள்ள பி.எஸ்.என்.எல் இணையதள வசதி சரிவர கிடைக்கவில்லை. இதனால் அஞ்சலகத்தில் அன்றாட பணிகள் முடங்கியுள்ளன. கடந்த 15 நாட்களாக இதனால் வாடிக்கையாளர்கள் அந்த இடத்திற்கு வந்து திரும்பி செல்கின்றனர். அவசரத் தேவைகளுக்கு வாடிக்கையாளர்கள் தங்களுக்கு பணம் எடுக்க முடியாமல் சிரமம் அடைந்துள்ளன. எனவே வாடிக்கையாளர்களின் இன்னலுக்கு முற்றுப்புள்ளி வைக்க இணையதள குறைபாட்டை சரிசெய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.