இடப் பிரச்சினை காரணமாக ஓய்வு பெற்ற பி.எஸ்.என்.எல் ஊழியரை கொலை செய்த வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கும்பகோணம் அருகே இருக்கும் திருச்சேறை உடையார் தெருவில் ஓய்வு பெற்ற பி.எஸ்.என்.எல் ஊழியரான சேகர் வசித்து வந்தார். இவருக்கும் இவரது தம்பி மகன் ஜெகன், தாய்மாமன் கலியபெருமாள், ஜெகனின் தங்கை மோகனா உள்ளிட்ட மூவருக்கும் இடப்பிரச்சனை இருந்து வந்த நிலையில் நேற்று அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டபோது சேகரை மூன்று பேரும் கீழே தள்ளிவிட்டுள்ளனர்.
இதில் சேகர் படுகாயமடைந்த நிலையில் அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அங்குள்ள மருத்துவமனையில் அனுமதித்தார்கள். பின் மேல் சிகிச்சைக்காக கும்பகோணத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் கொண்டு செல்லும்போது வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனால் சேகரின் மனைவி நாச்சியார்கோவில் போலீஸ் நிலையத்தில் ஜெகன், கலியபெருமாள், மோகனா உள்ளிட்டோர் மீது புகார் கொடுத்ததை அடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து கலியபெருமாள், ஜெகன் உள்ளிட்ட 2 பேரையும் கைது செய்துள்ளனர்.