பள்ளியின் மேற்கூரை இடிந்து விழுந்து 2 மாணவர்கள் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சேரன்மகாதேவி பகுதியில் இருக்கும் தாலுகா அலுவலகம் எதிரே பெரியார் அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் சேரன்மாதேவி, கூனியூர், பத்தமடை, புதுக்குடி மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். நேற்று முன்தினம் 12-ஆம் வகுப்பு கணினி அறிவியல் பாடப்பிரிவு அறையின் மேற்கூறையின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்ததை பார்த்து மாணவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இதில் சேரன்மகாதேவியில் வசிக்கும் சிந்தா மைதீன்(17) மற்றும் பத்தமடையில் வசிக்கும் கான்சா(17) ஆகிய இரண்டு பேருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. அவர்களை உடனடியாக மீட்டு சேரன்மகாதேவி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு மாணவர்கள் வீட்டிற்கு சென்றனர். இந்நிலையில் மாணவர்களின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்காமல் அலட்சியமாக இருந்ததாக பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.