கோவில் சுவர் இடிந்து விழுந்ததால் சிறுவன் உள்பட 2 பேர் பலியான நிலையில், 3 பேர் படுகாயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள எட்டித்துறை பகுதியில் புத்து மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. அப்பகுதியில் கன மழை பெய்தது. இதனால் அதே பகுதியில் வசிக்கும் கூலி தொழிலாளியான நடராஜ்(50), முருகனின் மகன் ஹரி(13), நிதிஷ்(11), பிரபு(35), நிர்மல்(14) ஆகியோர் மழையில் நனையாமல் இருக்க கோவில் சுவர் ஓரம் ஒதுங்கி நின்றனர். அப்போது எதிர்பாராதவிதமாக சுவர் இடிந்து ஐந்து பேர் மீதும் விழுந்தது. இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஆனால் இடிபாடுகளில் சிக்கி நடராஜ் மற்றும் ஹரி ஆகிய இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனை அடுத்து படுகாயமடைந்த 3 பேரையும் தீயணைப்பு வீரர்கள் மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் ஹரி, நடராஜ் ஆகியோரின் உடல்கள் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.