மதுபாட்டில் வயிற்றில் குத்தி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தெற்றிவிளை கிராமத்தில் கூலி தொழிலாளியான ஜெயக்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வேலை முடிந்த பிறகு தினமும் மது குடித்து விட்டு வீட்டிற்கு வருவது வழக்கம். இந்நிலையில் நேற்று முன்தினம் மது குடித்துவிட்டு போதையில் ஜெயகுமார் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது தான் குடித்தது போக மீதம் இருந்த மதுவை பாட்டிலுடன் இடுப்பில் சொருகி வைத்தபடி நடந்து சென்றுள்ளார். இதனை அடுத்து திடீரென ஜெயக்குமார் நிலைதடுமாறி கீழே விழுந்ததால் அவரது இடுப்பில் வைத்திருந்த மது பாட்டில் உடைந்து வயிற்றில் குத்தி கிழித்தது.
இதனால் படுகாயமடைந்த ஜெயக்குமாரை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு ஜெயக்குமாரை பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.