அரசு பேருந்தில் மழைநீர் ஒழுகியதால் பயணிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. நேற்று மாலை கருங்கல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இந்த மழையின் காரணமாக சாலையில் பல பகுதிகளில் தண்ணீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. இந்நிலையில் கருங்கல் பேருந்துநிலையத்தில் நேற்று பேருந்துக்காக மாணவ மாணவிகளும், பொதுமக்களும் காத்திருந்தனர்.
அப்பகுதியில் இயங்கும் பல அரசு பேருந்துகளின் மேற்கூரைகள் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் மழை பெய்யும் போது பேருந்துக்குள் தண்ணீர் ஒழுகியது. இதனால் பொதுமக்களும் மாணவ – மாணவிகளும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். எனவே அரசு பேருந்துகளின் மேற்கூரையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.