இங்கிலாந்து நாட்டில் உள்ள அபிங்டன் பகுதியில் எய்டன் ரோவன் என்ற வாலிபர் வசித்து வருகிறார். இவர் கடந்த 5-ம் தேதி ப்ளே ஸ்டேஷனில் வீடியோ கேம் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது இரவு 10:30 மணி அளவில் திடீரென பயங்கர சத்தத்துடன் அவர் உடலில் ஏதோ தாக்கியது போன்ற உணர்வு ஏற்பட்டுள்ளது. அதன்பின் வாலிபரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போது அவரை மின்னல் தாக்கி இருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு மருந்து மாத்திரைகளுடன் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இது தொடர்பாக வாலிபர் கூறுகையில், நான் சோபாவில் உட்கார்ந்து வீடியோ கேம் விளையாடிக் கொண்டிருந்தபோது வெளியே இடி இடித்துக் கொண்டிருந்தது. அப்போது என்னை திடீரென ஏதோ தாக்கியது போன்று உணர்ந்தேன். அதன்பின் பார்த்தால் என்னுடைய விரலில் தீக்காயங்கள் இருந்தது. மேலும் வாலிபரை மின்னல் தாக்கியதில் அவர்களது இதய துடிப்பு முதலில் ஒழுங்கான நிலையில் இல்லை என்றும், சிறிது நேரம் கழித்து தான் சீரான நிலைக்கு வந்தது எனவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.