தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குமரி கடல் பகுதியில் நிலவி வரக்கூடிய மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மாவட்டங்களான புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் தற்போது மழை பெய்திருக்கிறது. இதே நிலைதான் அடுத்து வரக்கூடிய சில நாட்களுக்கு இருக்கும் எனவும், பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் எனவும் சொல்லப்பட்டுள்ளது. தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல மாவட்டங்களில் கன மழை பெய்யும், வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.